கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாடப் பகுதிகளை குறைக்க தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் 30% பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பில் பொருளாதார பாடப்புத்தகத்தில் உள்ள பண மதிப்பிழப்பு குறித்தான பாடப்பகுதியை நீக்க தமிழக பள்ளிக் கல்வித்துறையும் முடிவெடுத்துள்ளது.

அண்மையில் சிபிஎஸ்சிஇ தங்களுடைய பாடப்புத்தகத்தில் உள்ள பணமதிப்பிழப்பு குறித்தான பாடப்பகுதியை நீக்குவதாக தெரிவித்திருந்தது. அதனை பின்பற்றி தமிழக பள்ளிக் கல்வித்துறையும் அந்த பாடப்பகுதியை நீக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.