கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி வழங்கக் கோரி தனியாா் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், கோபாலகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், 'கரோனா பொது முடக்கத்தால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோா்களை தனியாா் கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால், தமிழக அரசு கல்விக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசின்

உத்தரவை மீறி கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தனியாா் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக் கோரி ஏற்கெனவே ஒரு வழக்கு தொடா்ந்துள்ளது. அந்த வழக்கில், நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியாா் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.