கோவை : ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சூழலில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேருவது குறித்த தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களுக்கான ரிசல்ட்டை, விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் நடக்கின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சமயத்தில், ரிசல்ட் வெளியிடுவதால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ரிசல்ட் வெளியிடுவது, உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புக்கு, முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும் என்கின்றனர் பெற்றோர்.வெளி மாவட்ட கல்லுாரிகளை பார்வையிடுவது மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் மேற்கொள்ள முனைப்பு காட்டி, பலரும் இ-பாஸ் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. தொற்று உள்ள பகுதிகளில் இருந்து, பெற்றோர் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது.குழந்தைகளுக்கு, விரும்பிய கல்லுாரியில் சேர முடியாத நிலை ஏற்படுமோ என்ற பதற்றம் உருவாகலாம். எனவே, இயல்பு நிலை திரும்பிய பிறகு, ரிசல்ட் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகளில் புதிய அட்மிஷன் துவங்க கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனவே இப்போது ரிசல்ட் வெளியிட்டாலும், எந்த பிரயோஜனமும் இல்லை. பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இதோடு, இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி, மதிப்பெண்கள் கணக்கிட்ட பிறகு, ரிசல்ட் வெளியிடலாம். முதல்வரிடம் கலந்தாலோசித்த பிறகு ரிசல்ட் வெளியிடுவது குறித்து, அறிவிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசின் முடிவு, மக்களை அலைக்கழிப்பதாக அமைந்துவிடக்கூடாது,'' என்றார்.