வேதியியல் பாடத்தில் 24 மதிப்பெண்கள்தான் எடுத்ததாக குறிப்பிட்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என வற்புறுத்துவர். அதற்காக மாணவர்களை அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்துவர். பல இடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் சில மாணவர்கள் தற்கொலை முடிவுகளும் எடுக்கின்றனர்.

இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஊக்குவிப்பதற்காக அஹமதாபாத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்க்வான், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தான் எடுத்த மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு அறிவுரை வழங்கியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், தன் மதிப்பெண் பட்டியலை இணைத்து, வேதியியலில் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.