இந்தியாவில் கடந்த 'தேசியக் கல்விக் கொள்கை,' 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த கொள்கை கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக 'புதிய கல்விக் கொள்கை' வகுக்கப்படும் என பாஜக கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.

இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
*2030-க்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீத ஒட்டுமொத்த சேர்க்கை வீதத்துடன் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்த புதிய கொள்கை வழிவகுக்கிறது.

*பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளை, மீண்டும் கல்வி நீரோட்டத்திற்குக் கொண்டுவர தேசிய கல்விக் கொள்கை 2020 உதவும்.

*புதிய 5+3+3+4 பள்ளிப் பாடத்திட்டம் 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு மற்றும் 3 ஆண்டு அங்கன்வாடி/ மழலையர் பள்ளிப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

*அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணக்கறிவுடன், கடுமையான பிரிவினை இல்லாத பாடமுறை, பாடத்திட்டம் சாரா அம்சங்கள், பள்ளி அளவிலேயே தொழிற்கல்வி பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; தொழிற்பாடங்கள் 6-ம் வகுப்பிலிருந்தே தொடங்குவதுடன், உள்ளுறை பயிற்சியும் அளிக்கப்படும்.

*குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழி / பிராந்திய மொழியில் பயிற்றுவித்தல்.

*மதிப்பீட்டு முறையில், மதிப்பெண் அட்டை, கற்றல் விளைவுகளை அடைய ஏதுவாக, மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட 360 டிகிரி ஒட்டுமொத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.