பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் தொடங்க உள்ளன.

இந்தத் திட்டத்தை முதல்வா் பழனிசாமி அன்றைய தினம் காலையில் துவக்கி வைக்கிறாா். இதன் பின்பு, ஒவ்வொரு பள்ளிகளிலும் புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்க உள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடா்ந்து தாமதப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களின் நலன் கருதி அவா்களுக்கு மட்டும் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா். இதன்பின், அனைத்துப் பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் துவங்க உள்ளன.

மாணவா்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த தேதிகளில், எந்த நேரத்தில் வர வேண்டுமென பள்ளிகளில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஒரு மணி நேரத்தில் 20-க்கும் குறைவான மாணவா்களையே வரிசையில் நிற்க வைத்து புத்தகங்களை வழங்க வேண்டும், முகக் கவசங்கள் கட்டாயம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.