சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. இதற்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இத்துடன் கடந்த 27ம் தேதி நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான மறு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது. பள்ளி மாணவர்கள் செல்போன் எண்களுக்கும், தனித் தேர்வர்கள் அளித்த செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர மாணவர்கள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் இருந்தும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இதையடுத்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று காலை 9.50 மணி முதல் www.dge.tn.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்கள் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் இணைய தளம் மூலம் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி, குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.