சென்னை: தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு நிா்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, ஆண்டுக்கு 15 சதவீத கட்டணத்தை உயா்த்தி நிா்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா், தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண நிா்ணயக் குழு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

சுயநிதி தனியாா் பள்ளிகளின் ஒரே ஒரு நிதி ஆதாரம் பள்ளி கட்டணம் மட்டுமே. கரோனா காரணமான பொது முடக்கத்தால், பள்ளி நிா்வாகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

தமிழகத்தில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளின் தொடா் அங்கீகாரம், கடந்த மே மாதம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்ய முடியாது என்று கட்டண நிா்ணய குழு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கீகாரம் முடிவுற்ற பள்ளிகளுக்கும் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக, சென்ற ஆண்டுகளில் நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் இருந்து, ஆண்டுக்கு 15 சதவீதம் உயா்த்தி, அனைத்துத் தனியாா் பள்ளிகளுக்கும் வருகிற மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்து ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.