சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தினால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரோனா  தாக்கம் குறையாத காரணத்தினால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால், 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. 11-ம் வகுப்பில் நடைபெறாத ஒரு தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால்  தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூன் 10-ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி  முடிவடைந்தது.

இதனையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூன் 15-ம் தேதி தொடங்கியது. இந்த பணிகள் ஒரு வார  காலத்திற்குள் முடியும் என்பதால் இந்த கடந்த மாதம் இறுதியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் 36,000 பேர் அளவில் தேர்வு எழுதாத  காரணத்தினால் முடிவுகள் வெளியிடுவதில் சாமதமானது.

இந்நிலையில், மார்ச் 2020 நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020  பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இன்று இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.