கொரோனா ஊரடங்கில் , கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சங்கங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ; அரசு உதவி பெறாத பள்ளிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தில் 75 சதவிகிதத்தை மூன்று தவணைகளில் வசூலிக்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

தற்போது 25%, பள்ளிகள் திறக்கும்போது 25%, அதற்கு அடுத்த மூன்றுமாதம் கழித்து 25% என வசூலிக்க அனுமதிக்க உள்ளோம். இந்த கல்வியாண்டு கட்டணம் எவ்வளவு என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்கள் தரப்பு வாதத்தில் , இந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என இடைக்கால உத்தரவில் பிறப்பிக்க வேண்டும். பாட புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என மாணவர்களின் நலன் கருதி கேட்கிறோம்.

அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கோம் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

2 மாதங்களுக்கு பிறகு 35 சதவிகித கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் எனவும் கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டில் இருந்து 8 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் அக் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Newstm.in