கொரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்த சிஐஎஸ்சிஇ வாரியம் , தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை நாளில் எழுதலாம். விருப்பமில்லாதவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை.

அவர்களுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் இன்டர்னல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜூன் 22-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட பள்ளிக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.