🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
சேமநல நிதி அலுவலகங்களில் விரைவாக செட்டில்மென்ட் வழங்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த திட்டம் 

 கரோனா ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்களது சேமநல நிதியில் இருந்து (இபிஎப்) பணத்தை எடுத்து வருகின்றனர். இதை விரைவாக செயல்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) தொழிலாளர் பிராவிடன்ட் பண்ட் நிறுவனம் (இபிஎப்ஓ) செயல்படுத்த உள்ளது. 

இபிஎப்ஓ அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனினும், ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான கால நேரம் 10 நாட்களில் இருந்து 3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பணியாளர்களைக் கொண்டே இதை நிறைவேற்றியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய சூழலை சாதகமாக மாற்றும் வகையில் முழுவதும் இயந்திரமயமாக்க முடிவு செய்யப்பட்டது. முழுவதும் 54 சதவீத விண்ணப்பங்கள் 5 நாட்களில் தீர்க்கப்பட்டதாக இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே ஊழியர்கள் தங்களது சேமிப்பில் இருந்து பணம் எடுப்பதற்கான கோரிக்கைகளாகும்.  

இந்த நடைமுறையால் எதிர்காலங்களில் கிளைம் கோரிக்கைகளை விரைவில் தீர்க்க முடியும் என்று இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களில் மொத்தம் 36.02 லட்சம் விண்ணப்பங்கள் மூலம் பணியாளர்களுக்கு ரூ.11,540 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

இதில் பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15.54 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ.4,580 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத ஊதியம் பெறுவோருக்கு கோவிட்-19 என்ற பெயரில் முன்பணம் வழங்கப்படுகிறது. இதன்படி ஊழியர்களின் சேமிப்பில் 75 சதவீத அளவுக்கு பணம் அளிக்கப்படுவதாக இபிஎப்ஓ அறிக்கை தெரிவிக்கிறது.