சென்னை : 'ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு, கல்வி கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரித்துள்ளது.கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து, ஜூலையில் முடிவு செய்யலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. ஜூன், 1 முதல் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு, தனியாக கல்வி கட்டணம் கேட்டு, பள்ளிகள், எஸ்.எம்.எஸ்., அனுப்புவதாக, பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுஉள்ளது.அதனால், பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்த கால கட்டத்தில், முந்தைய கல்வி ஆண்டுக்கான நிலுவை கட்டணம் மற்றும் புதிய கல்வி ஆண்டுக்கான கட்டணம் கேட்டு, பெற்றோரை நிர்பந்தம் செய்யக்கூடாது என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும், சில மெட்ரிக் பள்ளிகளில், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த, கல்வி கட்டணம் செலுத்துமாறு, பெற் றோரை நிர்பந்தம் செய்வதாக புகார் பெறப்பட்டுஉள்ளது. அரசாணையை மீறி, கல்வி கட்டணம் கேட்டு வற்புறுத்தும் பள்ளிகள் மீது, விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.