அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அறிக்கை தாக்கல்

மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒடக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவில் சுகாதாரத்துறை செயலாளர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் கலையரசன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது பற்றி ஆய்வுக்குப் பிறகு இந்த குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடன் அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் உடன் இருந்தார்.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் தனது ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார். அதில்,"அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்கிட, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு அறிக்கையை சமர்ப்பித்தார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.