தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் எப்படி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள்

கரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதாலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, ஆசிரியர்கள் ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கச் சொல்லி பல பள்ளிகலும் உத்தரவிட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Dailyhunt