சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று 12 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. மருத்துவபடிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இக் கூட்டம் முடிந்ததும் பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறை அருகே உள்ள கூட்டம் அரங்கில் தான் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது தான் வழக்கம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

 இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள், கள  நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அவசர சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம் இயற்றப்படும் பட்சத்தில் சட்டத்தை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதனால், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
* சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
* இதன்பின் பகல் 12 மணியளவில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.