சென்னை: கணனி திரையை நீண்ட நேரம் பார்த்தல் மாணவர்களின் பார்வை திறன் பாதிக்கப்படும் என்பதால் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில்  அரசு கண் மருத்துவமனை டீன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த விமல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கல்வி என்ற பெயரில் அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு அதிகநேரம் போன் மற்றும் கணினி திரைகளை பார்ப்பதால் பார்வை கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்னணு திரைகளை மாணவர்கள் அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து கண் மருத்துவ நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் விமல் முறையிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா கிருஷ்ணன் மற்றும் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.ரவீந்திரன், மாணவர்களுக்கு கண் பாதிப்புடன் மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 25-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இது குறித்து சென்னை கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.