அலிகார்: ராணுவ வீரர்கள் உயிரிழப்பால் சீனாவுக்கு பாடம் கற்பிக்க செல்வதாக பேரணியாக சென்ற சிறுவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லடாக் மோதலால் இரு தரப்பு ராணுவங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே சீன எதிர்ப்பு மனநிலை இந்தியர்கள் இடையே அதிகரித்துள்ளது. சீன தயாரிப்புகளை புறக்கணிப்பு என பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பத்து சிறுவர்கள் ராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து சிறுவர்கள் சாலையில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அச்சிறுவர்களை  மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது சிறுவர்கள் லடாக்கில் ராணுவ வீரர்கள் மரணத்தால் சீனாவுக்கு பாடம் கற்பிக்கப்போவதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களை விசாரிக்கும்போது ​​எங்கள் நாட்டு ராணுவ வீரர்களைக் கொன்றதற்கு சீனாவுக்கு 'ஒரு பாடம்' கற்பிக்க விரும்புவதாக சிறுவர்கள் கூறியுள்ளார்கள். இதனையடுத்து போலீசாரை இந்த விஷயம் ஈர்க்கப்பட்டதாகத் தோன்றினாலும் அந்த சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கி திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.