இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள நாடுகளில் இருந்து ஓய்வூதிய நிதியில் முதலீடுகள் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு மத்திய நிதியமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய முன்மொழிவை நிதியமைச்சகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படும் முதலீடுகளுக்கு மட்டும் அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.

ஓய்வூதிய நிதியின் மீதான அந்நிய முதலீடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வரைவு அறிவிக்கையில், 'சீனா உள்பட இந்தியா எல்லையை பகிா்ந்துகொள்ளும் நாடுகளில் இருந்து எந்தவொரு நிறுவனமோ, தனி நபரோ முதலீடுகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அவ்வப்போது வெளியிடப்படும் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை தொடா்பான விதிமுறைகள் யாவும் ஓய்வூதிய நிதி முதலீடு விவகாரத்திலும் பொருந்தும்.

இந்தக் கட்டுப்பாடுகள் அறிவிக்கை வெளியான தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. வரைவு அறிவிக்கை தொடா்பான கருத்துகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் யாவும், கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட தொழில்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புக்கான துறையின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ளது.