இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழக வரிசையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 83- ஆவது இடமே கிடைத்திருக்கிறது.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களின் தர மதிப்பீட்டை வெளியிட்டு வருகிறது. நடப்பு 2020- ஆம் ஆண்டுக்கான இப்பட்டியல், கடந்த ஏப்ரல் மாதமே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் சிறந்த கல்வி நிலையங்களின் தரப்பட்டியலை வியாழனன்று (ஜூன் 11- ஆம் தேதி) வெளியிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. கல்வி நிறுவனமும், டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனமும் பெற்றன. நாட்டின் சிறந்த 100 பல்கலைக்கழங்கள் குறித்த பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு ஆண்டிலும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மையம் (ஐ.ஐ.எஸ்.சி.) முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாம் இடமும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.


ஒவ்வொரு கல்வி நிறுவனம், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சி தொடர்பாக மேற்கொண்ட பயணங்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தர மதிப்பீட்டு குறியீட்டு எண்கள் வழங்கப்படுகின்றன.

சேலம் பெரியார் பல்கலையைப் பொருத்தவரை நடப்பு ஆண்டில் 83-ஆவது இடமே கிடைத்திருக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டில் பெரியார் பல்கலை 68- ஆவது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில் 15 இடங்கள் பின்தங்கியிருப்பது, அப்பல்கலைக்கழகத்தின் மோசமான செயல்பாடுகளையே காட்டுகிறது. பல்வேறு துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது, தேர்வு எழுதினாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்ச்சி முடிவுகள் வெளியிடாதது, தொலைதூர கல்வி மையத்தில் நிலவும் குளறுபடிகள், நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் முழுநேர அதிகாரிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தச் சறுக்கல் ஏற்பட்டிருக்கலாம் என பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு அரசுப் பல்கலைக்கழகமும் இடம் பிடித்திராத நிலையில், கோவையில் உள்ள அமிர்தா விஸ்வா வித்யாபீதம் என்ற தனியார் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இன்னொரு முக்கியப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 12- ஆவது இடம் கிடைத்திருக்கிறது. முதல்முறையாக இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டில் பல் மருத்துவக்கல்வி நிலையங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.