மதுரை: மாணவி நேத்ராவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மதுரை மேலடையை சேர்ந்தவர் மோகன் (47). சலூன் கடை நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். இதற்காக அவர் தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ 5 லட்சத்தை செலவிட்டுள்ளார்.

இவரது மகள் நேத்ரா. இவர் 9ஆவது வகுப்பு படித்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார். இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோகனை பாராட்டினார்.

இந்த நிலையில் அவரது மகள் நேத்ராவை ஐநா நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன் என்றார்.