ஈரோடு:
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முயற்சி எடுக்கப்பட்டபோது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குரிய அனைத்து ஆலோசனைகளையும் செய்த பிறகு தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதில் காலாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், அரையாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன. தனித்தேர்வர்கள் நிலை குறித்து பரிசீலனை செய்து அறிவிக்கப்படும். அதேபோல் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது. இதுபோன்ற பல்வேறு குறைகள் குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.