சென்னை: தேர்வுத்துறை பெண் இயக்குனருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

தேர்வுத் துறையில், உதவி இயக்குனராக பணியாற்றும் பெண் அதிகாரிக்கு, 10 நாட்களுக்கு முன், கொரோனா தொற்று உறுதியானது. இதன்பின், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் இணை இயக்குனர், தன் சொந்த ஊரான தர்மபுரிக்கு செல்லும் வழியில், பரிசோதனைக்கு உள்ளானார். அப்போது, அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனால், நேற்று முன்தினம், கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர், கொரோனா பரிசோதனை செய்தனர். 

அதில், தேர்வுத்துறை பெண் இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர், நேற்று முன்தினம் வரை, தலைமை செயலகம் சென்று, முதன்மை செயலர் மற்றும் அமைச்சக அலுவலர்களை சந்தித்து, கோப்புகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான வழக்கிற்காக, நீதிமன்றத்திற்கும் சென்று வந்துள்ளார். 

எனவே, அவர் சென்ற இடங்கள் மற்றும் சந்தித்த நபர்களுக்கு, பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும், பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தேர்வு துறையில் மூன்று அதிகாரிகளுக்கு, இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 விடைத்தாள் திருத்த பணிகளும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளும், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.