பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு, இலவச ஆட்டோக்கள் இயக்க கோவையில் விஜய் ரசிகர்கள் முன்வந்துள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் விஜய் பிறந்த ஜூன் மாதம் முழுவதும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இலவச ஆட்டோ சேவை துவக்க விழா கோவையில் நடைபெற்றது. இதனை ஜே.ஆர்.டி.குழுமத்தின் தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கோவையின் முக்கிய பகுதிகளில் பத்து ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்பட்ட இந்த இலவச சேவை, இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர் தேர்வு மையங்களுக்கு செல்லவும் இயக்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.