திருவனந்தபுரம்: மலப்புரம்  அருகே ஆன்-லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் 9ம் வகுப்பு மாணவி  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ேகரளாவின் மலப்புரம் அருகே இரிம்பிளியம் பகுதியைச்  சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஷீபா. இவர்களது மகள் தேவிகா(15). 9ம்  வகுப்பு தேர்வெழுதிய இவர் 10ம் வகுப்பு செல்ல இருந்தார். கொரோனா  பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த  நிலையில் நேற்று முன்தினம் முதல் ேகரள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன்  வகுப்புகள் தொடங்கின. கேரள அரசின் விக்டர்ஸ் என்ற கல்வி சேனலிலும், இந்த  சேனலின் பேஸ்புக் மற்றும் யூடியூப்பிலும் வகுப்புகள் ஒளிபரப்பு  செய்யப்படுகின்றன. வீடுகளில் டிவி, ஸ்மார்ட் போன், இணையதள வசதி  இல்லாதவர்கள் அருகில் உள்ள நூலகங்கள் அல்லது பள்ளிகளுக்கு சென்று ஆன்-லைன்  வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. 

இந்த  நிலையில் தேவிகாவின் வீட்டில் இருந்த டிவி கடந்த சில தினங்களுக்கு முன்பு  பழுதானதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போன், இன்டர்நெட்டும்  கிடையாது. இதனால் தேவிகாவால் முதல்நாள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள  முடியவில்லை. இது தேவிகாவுக்கு வேதனைை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டின் பின்புறம் தேவிகா தீயில்  கருகிய நிலையில் இறந்து கிடந்தார். ஆன்லைன் வகுப்பில்  கலந்து ெகாள்ள முடியாததால் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்  போலீசில் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.