கல்வி கட்டணம் குறித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டதால் நடவடிக்கை

கோவை: கோவை  பி.எஸ்.பி.பி. மில்லினியம் என்ற பள்ளியில், கட்டணம் கேட்ககூடாது என்று பெற்றோர் வாட்ஸ்அப் குழுவில், கருத்து பதிவிட்டதால் 60 மாணவர்களை பள்ளி  நிர்வாகம் நீக்கியுள்ளது. பி.எஸ்.பி.பி. (பத்ம சாஸ்திரி பால பவன்) என்கிற சி.பி.எஸ்.இ. பள்ளி, கோவை, சென்னை, கர்நாடகாவில் பெங்களூர், ஆந்திராவில், ஐதராபாத் ஆகிய இடங்களில்  இயங்கி வருகிறது. திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இப்பள்ளியை நடத்துகிறார். கோவை வடவள்ளியில் பி.எஸ்.பி.பி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆன்லைன் வகுப்பு தொடங்குவதற்காக, பெற்றோர்-மாணவர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவை பள்ளி நிர்வாகம் உருவாக்கியது. இதில், ஜூன்1ம்  தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வகுப்புகளுக்கான லாகின் ஐ.டி., பாஸ்ேவர்டு ஆகியவையும் தரப்பட்டது. ஆனால், 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட சில மணி நேரங்களில், வடவெள்ளியை சேர்ந்த அருணாவின் இரட்டை குழந்தைகள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், வாட்ஸ்அப் குழுவிலிருந்து அருணாவும் நீக்கப்பட்டார். 

மேலும், வாட்ஸ்அப் குழுவில் இருந்த அனைத்து பெற்றோர்களையும் நீக்கியதுடன் 60 மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு என ஒரு வாட்ஸ்அப் குழு இருந்தது. இதில், பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த செய்தியை பதிவிட்ேடாம். இதனால், ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதே திடீரென குழந்தைகளை நீக்கிவிட்டனர். இதற்கு பள்ளியிடம் விளக்கம் கேட்டபோது, பெற்றோர் சமூகவலைதளங்களில் பள்ளிக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதனால், ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளியின் இந்த விளக்கத்தை ஏற்கமுடியாது. இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.