தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்கு 50,000 ரூபாய் வரை பெற்றோரிடம் பணம் கேட்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கான தேர்ச்சியை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 80 சதவீத மதிப்பெண் காலாண்டு அரையாண்டுத் தேர்வின் அடிப்படையிலும் 20% மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது அரசின் உத்தரவாகும். அந்த வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே 11-ஆம் வகுப்பில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்வது நடைமுறை. அந்த வகையில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களே கணிதம், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க முடியும். இதை சாதகமாக பயன்படுத்த துவங்கியுள்ள தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண் வழங்குவதற்கு 50,000 ரூபாய் வரை பெற்றோரிடம் பணம் கேட்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அரசு எடுத்த முடிவு தற்போது தவறான திசையில் திரும்பியுள்ளது. இதனைத் தடுக்க உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.