சென்னை: ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழ் தருவதற்கான கால வரம்புக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை (ஓய்வூதியம்) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்க்கை சான்றிதழ், பணியில்லா சான்று, மறு மணம் செய்யாத சான்று போன்ற இனங்களுக்கான சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் ஒவ்வொறு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன்  மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த சான்றிதழ் வழங்குவதவற்கான சூழல்  பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இதன் கால வரம்பை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அவகாசம்  வழங்குமாறு கரூவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.  

இதை ஏற்று ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான தகுதி சான்றிதழை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்பிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு காலம் என்பதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த மாதங்களுக்குள் சான்றிதழை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரி முன் அக்டோபர் மாதம் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் நவம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.