பள்ளிகளுக்கு ஜூலை 31 வரை விடுமுறை : மத்திய அரசும் ஊரடங்கை நீட்டித்தது

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை, கட்டுப்பாட்டு பகுதிகளில், ஜூலை, 31 வரை நீட்டித்து மத்திய அரசு, நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது. பள்ளி, கல்லுாரிகளுக்கும், அடுத்த மாதம், 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25ல் நாடு தழுவிய முதல் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பின், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறையாததால், ஐந்து முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

ஆனாலும், நாடு முழுதும் இதுவரை, 5.48 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து, 475 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆறாம் கட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு அறிவித்தது. இதன்படி, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், ஜூலை, 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன; இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கை:* வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஜூலை, 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. பாதிப்புகளின் அடிப்படையில், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே, கட்டுப்பாட்டு பகுதிகளை வரையறுத்து, ஊரடங்கு குறித்து முடிவு செய்யலாம்

* நாடு முழுதும் பள்ளி மற்றும் கல்லுாரிகள், வரும், 31 வரை மூடப்பட்டிருக்கும்

* இரவு நேர ஊரடங்கு, இரவு, 10:00 லிருந்து, காலை, 5:00 மணி வரை அமலில் இருக்கும்

* கர்ப்பிணிகள், நோய் பாதிப்புக்கு ஆளானோர், 60 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அத்தியாவசியம் ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது

* சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்த சிறப்பு விமான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி உண்டு

* உள்நாட்டு விமானப் போக்குவரத்து, தேவைக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கப்படும். பயணியர் ரயில் போக்குவரத்து, தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயங்குகிறது. சூழலுக்கு ஏற்ப, ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்

* வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில், குறிப்பிட்ட நேரத்தில் உரிமையாளர், பணியாளர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம்; அப்போது, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள வைரஸ் பாதிப்பை கணக்கில் வைத்து, இதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

* மெட்ரோ ரயில்கள் இயங்காது; சினிமா தியேட்டர், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், பொழுது போக்கு பூங்கா, ஆடிட்டோரியம், கருத்தரங்கு கூடம் ஆகியவவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

* சமூக, அரசியல், விளையாட்டு, கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது

* மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி மையங்கள், ஜூலை, 15 முதல், விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில், அதாவது வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், மேலே கூறப்பட்ட பொதுவான தடைகளை தவிர, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது

* வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், வரும், 31 வரை ஊரடங்கு, எந்தவித தளர்வுமின்றி நீடிக்கும். அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்துக்கு தடையில்லை. சம்பந்தபட்ட மாநில அரசுகளிடம் இதற்கு அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.