சென்னை; 'மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் வரும், 22ம் தேதி முதல், பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் போன்றவை, மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட கல்வி அலுவலர்கள், 22ம் தேதி முதல், 30ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில், ஜூலை முதல் வாரத்தில், புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டும்.இந்த பணிகளில், கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.