ஜூலை முதல் வாரத்தில் பிளஸ்2  ரிசல்ட்!

சென்னை: 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியில் நடத்தப்பட்டு, மார்ச், 24ல் முடிந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்டோர், இந்த தேர்வை எழுதினர். தேர்வின் விடைத்தாள்கள் திருத்தம், இரண்டு வாரங்களுக்கு முன் முடிந்தது. இதை தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.


மதிப்பெண் பட்டியல்

ஒவ்வொரு விடைத்தாளுக்கும் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதி மதிப்பெண் பட்டியல், இம்மாத இறுதியில் தயார் செய்யப்படும்.
இந்நிலையில், ஜூலை முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும். இணையதளம் வாயிலாகவும், மொபைல்போனில், எஸ்.எம்.எஸ்., வழியேயும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.


தேர்வு முடிவுகள் வெளியான பின், மதிப்பெண் பட்டியல் ஆன்லைனில் வழங்கப்படும். அதன்பின், உடனடி துணை தேர்வு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிந்ததும், மதிப்பெண் பட்டியல் சான்றிதழாக வழங்கப்படும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பள்ளிகள் திறப்பு?

ஈரோடு மாவட்டம், நம்பியூரில், செங்கோட்டையன் அளித்த பேட்டி: கொரோனாவால், 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில், துறை ரீதியாக, பணிகள் வேகமாக நடக்கின்றன. தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க, கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷனில், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஒருவர் பொறுப்பேற்க, முதல்வர் மற்றும் நீதித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவில், அவர் பொறுப்பேற்றதும், தனியார் பள்ளிகளின், அடிப்படை கட்டமைப்பை ஆய்ந்து, அதன்பின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போதைய கொரோனா சூழலில், பிளஸ் 1 வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என இயக்குனர் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. தொற்று நிலைமை சரியான பின், சூழ்நிலைக்கு ஏற்ப, முதல்வர் இ.பி.எஸ்., உரிய நேரத்தில் முடிவு எடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், 'டுவிட்டர்' பக்கத்தில், செங்கோட்டையன், 'நடப்பு கல்வியாண்டில், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், எந்த அளவுக்கு பாடங்களை நடத்துவது மற்றும் குறைப்பது என, நிபுணர் குழு ஆய்வு செய்கிறது. இந்த குழுவின் பரிந்துரைப்படி, பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என, தெரிவித்துள்ளார்.