உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. அங்குள்ள மெயின்புரி நகர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியாராக பணியாற்றுகிறார். இதே பெயரில் உள்ள பள்ளிகள் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

அனாமிகா சுக்லாவின் பெயர் ஒரே நேரத்தில் ரேபரேலி பள்ளி பதிவேட்டிலும், மெயின்புரி பள்ளி பதிவேட்டிலும் இருப்பது தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டது. பள்ளி வாரியாக பணியாற்றும் ஆசிரியர்களுக்காக மனவ் சம்ப்தா என்ற பெயரில் உருவாக்கப்படும் டேட்டா பேஸ் பதிவின் போது இந்த குளறுபடி கண்டறியப்பட்டது.

இதையடுத்து அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து கஸ்தூரிபா பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு அனாமிகா சுக்லா என்பவரின் பெயர் வருகை பதிவேட்டில் இருக்கிறாதா என்று கேள்வி எழுப்பட்டது.
இந்த கேள்விக்கு கிடைத்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் அவரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்றும், ஒரு மாதம் 2 மாதமல்ல கடந்த 13 மாதங்களாக இந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் 1 கோடிக்கு மேலே சம்பள பணத்தை அனாமிகா பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திற்கு மேல் பணம் மாதா மாதம் வந்தும் அனாமிகா எந்த தகவலையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதையடுத்து இந்த மாதம் அவருக்கு அனுப்ப வேண்டிய சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.