ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துவரும் சூழலில் அடுத்தகட்டமாக பிளஸ் 1 வகுப்புகளுக்கான ஆயத்தப் பணிகளில் தனியார் பள்ளிகள் வேகம் காட்டிவருகின்றன.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான மதிப்பெண் பட்டியலிடும் பணிகளையும் மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இதனிடையே, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூரில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது 10-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவிருப்பதாகவும், பிளஸ் 1-ல் எந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்யவுள்ளீர்கள், அது தொடர்பான விளக்கமும், வகுப்பு எடுக்கப்படவுள்ளதால், மாணவர்கள் ஸ்மார்ட்போனுடன், பள்ளியின் இணைய முகவரியுடன் தொடர்புகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள், உடனடியாக குறிப்பிட்ட சீன நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவ்வுளவு தொகை கொடுத்து எப்படி ஸ்மார்ட்போன் வாங்குவது என பெற்றோர்கள் புலம்புகின்றனர். இது தவிர கடைகளில் ஸ்மார்ட்போன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியை குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக, கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலாவிடம் கேட்டபோது, "இது தொடர்பாக எந்தப் பெற்றோரும் புகார் அளிக்க முன்வராதபட்சத்தில் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? புகாரளிக்கும் மாணவரோ, பெற்றோர் விவரமோ வெளியிட மாட்டோம் எனக் கூறியும், எவரும் புகாரளிக்க முன்வருவதில்லை. அப்படிப் புகாரளித்தால் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியாவிடம் கேட்டபோது, "இதுவரை எனக்குப் புகார் வரவில்லை. ஒருவேளை மாவட்டக் கல்வி அதிகாரிகளிடத்தில் புகார் வந்திருக்கிறதா என அறிந்து, அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Source : www.hindutamil.in