நாடுமுழுவதும் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள்ளாக வெளியிடப்படும், சிலநாட்கள் இடைவெளியில் இரு வகுப்புத் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்

கரோனா வைரஸ் நோய் தொற்று காரணாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு தேர்வுகள் பாதி நடந்துள்ளன, 12-ம் வகுப்பு தேர்வுகளும் நடக்கவில்லை. கடந்த மாதம் சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தி முடிக்கஅட்டவணை வெளியிட்டுள்ளது.

இதில் டெல்லியில் மட்டும் ஜூலை 3-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிகிறது, பிற மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிகிறது

இந்த சூழலில் அடுத்த உயர்கல்விக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமெனில் தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிப்பது அவசியம் அந்த வகையில் தேர்வு முடிவுகள் குறித்த தேதியையும், அடுத்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்பதை அறிவிக்காமல் இருந்தது.
கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பில் அவசரப்படக்கூடாது என்று பெற்றோர்கள் தரப்பிலும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், பள்ளிகள் திறப்புக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில் ' சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும். இரு வகுப்பு தேர்வு முடிவுகளும் சில நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படும்

ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் பள்ளிகள் திறப்பு குறித்து குறித்த பணிகள் தொடங்கும். நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், சூழல் குறித்தும் நன்கு பரிசீலித்தபின்புதான் பள்ளிகள் திறப்புக்குறித்து முடிவு செய்யப்படும். ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் பல்கலைக்கழகங்களில் புதிய வகுப்புகள் தொடங்கும்' எனத் தெரிவித்தார்

இதற்கிடையே டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணிஷ் சிஷோடியா, மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு பள்ளிகள் திறப்புக் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ' கரோனா வைரஸுடன் நாம் வாழ்வதற்கு சில காலம் தேவைப்படும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் நமக்கமுக்கியம். பள்ளியின் சூழல், உடல்நலன் சிறப்பாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.ஆன்-லைன் வகுப்புகளோடு பாடங்கள் முடிந்துவிடவில்லை.

சிறு குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், பெரிய வகுப்பில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதும் சாத்தியமாகாது' எனத் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டக்கூடாது எனக் கூறி பல்வேறு ஆலோசனைகள் தனியார் பள்ளிகள் மூலம் மத்திய மனிதவளத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறப்பில் மத்திய அரசு கவனம் செலுத்தாது, மீதமிருக்கும் 10,12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்கவே முன்னுரிமை அளிக்கும் என மத்திய மனிதவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்