புதுடில்லி : மீதியுள்ள, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி, சி.பி.எஸ்.இ., இன்று(ஜூன் 24) முடிவு செய்கிறது.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், கடந்த, பிப்ரவரி மாதம், 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம், 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் துவங்கின. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 12ம் வகுப்பில், சில பாடங்களுக்கு தேர்வு நடத்த முடியாமல் போனது. 10ம் வகுப்பை பொருத்தவரை, டில்லியில் சில பகுதிகளை தவிர, நாடு முழுவதும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.ஒத்தி வைக்கப்பட்ட, 12-ம் வகுப்பு தேர்வுகளை, ஜூலை, 1 - 15ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, சி.பி.எஸ்.இ,. கடந்த, மே மாதம் வெளியிட்டது.ஆனால், இதன் பின், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில், 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மாணவ, மாணவியினர் பெற்றோர் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தாவது: நாட்டில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான தேதிகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் மாணவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.வெளிநாடுகளில், 250க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 12 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இங்கும், 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12ம் வகுப்பில் மீதமுள்ள தேர்வுகளை, ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும், கடந்த, 17ம் தேதி அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி, கன்வில்கர் தலைமையில், நீதிபதிகள், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.அப்போது, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:அரசு, மாணவ, மாணவியரின் நலனில், மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மீதியுள்ள, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி, சி.பி.எஸ்.இ.,யும், அரசும், விரைவில் முடிவு எடுக்கும்.அதனால், விசாரணையை ஒருநாள் ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதை ஏற்று, வழக்கு விசாரணையை, 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால், மீதியுள்ள, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி, சி.பி.எஸ்.இ., இன்று முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.