சென்னை: தனியார் பள்ளிகள் 10ம் வகுப்பு தேர்வை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 18 பேர் கொண்ட குழுவின் ஆய்வு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆராய 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14 அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வருகிற ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை குறைகிறபோது அதற்கேற்ப கடந்த ஆண்டு கொண்டுவந்த புதிய பாடத்திட்டத்தில், குறிப்பாக எந்தெந்த பகுதிகளை எதிர்காலத்தில் குறைத்து மாணவர்களுக்கு கல்வியை கற்று தருவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் இந்த குழு ஆலோசனை செய்து வருகிறது. பாடத்திட்டங்களை இன்றுள்ள சூழலுக்கு ஏற்ப எந்தெந்த வடிவத்தில் குறைத்து மாணவர்களிடம் கொண்டு செல்லலாம் என்பது குறித்து குழு முடிவு செய்து முதல் வாரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து குழுவின் முடிவின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வை தனியார் பள்ளிகள் நடத்துவது குறித்து எந்த புகார்களும் இதுவரையில் வரவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த துறை சார்பாக அலுவலர்களும் ஆய்வு செய்துள்ளார்கள். மத்திய அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பு வந்தவுடன் இதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.