10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடியாதா, மாணவர்களின் உயிரைவிட பொதுத் தேர்வு முக்கியமானதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல் நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி - சுரேஷ் குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் முனுசாமி, மாணவர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே தேர்வுகளை இரண்டு முறை ஒத்திவைத்துவிட்டதால், மறுபடியும் ஒத்திவைக்க முடியாது எனக் கூறினார்.

பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தேர்வை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் மாணவர்களின் எதிர்காலத்தைவிட, அவர்களது உயிர் முக்கியமானது என்றும் தற்போதைய சூழலில் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல இருக்கிறது என்றும் கருத்துதெரிவித்தனர். தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படாது என்று கூற முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராகாததால், தேர்வை ஒத்திவைக்க முடியுமா எனக் கேட்டு, பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசி வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
பிபிசி தமிழ் ட்விட்டர்
பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
பிபிசி தமிழ் யு டியூப்
source: bbc.com/tamil