விருத்தாசலம் : விருத்தாசலம் கல்வி மாவட்ட மையத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்க்கும் பணியை, சி.இ.ஓ., பார்வையிட்டார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணுடன், வருகைப்பதிவேடு விகிதம் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.அதன்படி, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 125 அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களின் விபரம் மற்றும் காலாண்டு, அறையாண்டு தேர்வு விவரங்கள், பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் உள்ள மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதில், மாணவர்களின் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் மதிப்பெண், வருகைப்பதிவேடு, ரேங்க் கார்டு சரியாக மதிப்பிடப்பட்டுள்ளதா என சிறப்பு ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இப்பணியை, சி.இ.ஓ., ரோஸ்லின் நிர்மலா நேற்று பார்வையிட்டார். ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணிபுரிய அறிவுறுத்தினார். டி.இ.ஓ., பாண்டித்துரை, பள்ளி துணை ஆய்வாளர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.