சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள், தங்களது மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். இயல்பான நிலை திரும்பி, நம்பிக்கையான பாதுகாப்பான நிலை உருவான பிறகு, பொதுத்தேர்வை நடத்தலாம். நாள்தோறும், நோய் தொற்று அதிகரிக்கிறதே தவிர, குறைவதற்கான அறிகுறியே இல்லை.ஒருவருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்ற தொடக்க நிலை, தொற்று தெரியாத அளவில் தொற்று பரவி வருகிறது. தேர்வை நடத்திய தீருவது என்ற வறட்டு பிடிவாத முடிவு, மாணவர் உயிருடன் விளையாடுவது அபாயகரமான ஆட்டம். தொற்று எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பில் பெயில் ஆகியுள்ள அரசு, மாணவர்கள் பாஸ் அல்லது பெயில் ஆகியுள்ளனரா என்பதை அறிய தேர்வு நடத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.