தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை, பள்ளிகள் இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதினொன்றாம் வகுப்பு தேர்வுகளை எழுத இருந்த மாணவர்களின் வருகைப்பதிவேடுகளும் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின் பதிவேடுகளை இன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வருகைப் பதிவேட்டின் கடைசிப் பக்கத்தில் தலைமை ஆசிரியரோ அல்லது முதல்வரோ கையொப்பமிட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதனை பெற்றுக் கொள்ளும் மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் அல்லது பள்ளி துணை ஆய்வாளர் வருகைப்பதிவேட்டில் கடைசிப் பக்கத்தில் கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான நேரத்தினை அந்தந்த பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கப்பட்ட வருகை பதிவுகள் முத்திரையிட்டு தனி அறையில் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையினை இன்று மாலை 5 மணிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனர் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.