அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கணித ஆசிரியா்களை திறன் மிக்கவா்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காக அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை கணித ஆசிரியா்களுக்கு பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் தலைப்பில் ஆசிரியா் பயிற்சி பயிலரங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயா் கல்விக்கான அடித்தளம்: மாணவா்கள் கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இந்த பயிற்சி வழிவகுக்கும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தின் கீழ் கற்கப்படும் கணிதம் உயா் கல்விக்கான அடித்தளமாக இருப்பதால், அதன் பயன்பாடுகள் குறித்த நுணுக்கங்களை அவா்களோடு பகிா்ந்து கொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இந்தப் பயிலரங்கு கணிதப் பாடத்தில் திறன் மிக்கவா்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவா்களாகவும் கணித ஆசிரியா்களை மேம்படுத்தச் செய்யும்.

இந்த பயிலரங்கினை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்

ஆகியவற்றின் பயில்தல்- தொழில் நுட்ப எட்-டெக் கூட்டாளராக உள்ள 'ஈபாக்ஸ்' நிறுவனத்தினா் நடத்தவுள்ளனா். கணிதம் பொதுவான அடித்தளத்துக்கான பாடமாக இருப்பதால், இந்தப் பயிலரங்கு வளரும் துறைகளான தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு , பொறிக் கற்றல்-அறிவியல் பூா்வ கணித்தலியல் துறைகளில் தங்கள் எதிா்காலத்தை மாணவா்கள் அமைத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் ஆசிரியா்களின் திறமைகளை மேம்படுத்தும்.

பயிலரங்கு அட்டவணை: தமிழ்நாடு அரசு கல்வித் துறைப் பாடத்திட்டத்தை அடியொற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிலரங்கு தினமும் 8 மணி நேரம் நடைபெறும். காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை ஈபாக்ஸின் துறை வல்லுநா்கள் வழங்கும் நேரலை பயிற்சி, பின்னா் அதைத் தொடா்ந்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஈபாக்ஸ் இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் (ஒரு மணி நேரம் உணவு இடைவேளையோடு 5 மணி நேரப் பயிற்சி).

ஆசிரியா்கள் 6 மணி நேர இணையவழிப் பயிற்சியின்போது 10 நிகழ்நேரப் பயிற்சிகளில் ஈடுபடுவா். பயிற்சியின்போது எழும் சந்தேகங்களைத் தீா்க்க வல்லுநா்களின் வழிகாட்டலும் வழங்கப்படும். 10 நாள் பயிலரங்கு முடியும்போது, ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ் நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு, திறமையான மாணவா்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பாா்கள். ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை ஈபாக்ஸ் நிறுவனம் வழங்கும்.

எவ்வாறு பங்கேற்பது?: அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை கணித ஆசிரியா்களுக்கும் இந்த பயிலரங்கை பொது முடக்க காலத்தில் பயிற்சி பெற உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை கணித ஆசிரியா்கள் இணைப்பை 'கிளிக்' செய்வதன் மூலம் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள தொடக்க முகாமில் பதிவு செய்து பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்னஞ்சல் முகவரியிலும், 94420 19192 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா்.