கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாகப் பள்ளிக் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது நடத்த முடியாமல்போன 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15-ம் தேதி நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தேர்வை மேலும் சில நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருவதாகவும், ஆனாலும், அறிவித்த தேதியில் தேர்வை முடிக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பள்ளி மாணவர்களைத் தேர்வுக்கு ஊக்கப்படுத்தி வீட்டிலிருந்தே படிக்க வைக்கும் வகையில் புது முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

அரசுப்பள்ளி
கணித ஆசிரியரான தமிழரசன் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஆசிரியருக்குப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஆசிரியரின் இந்த முயற்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதுபற்றி ஆசிரியர் தமிழரசனிடம் பேசினோம்.``புதுக்கோட்டை பக்கத்துல வடகாடுதான் எனக்குச் சொந்த ஊரு. தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக 12 வருஷமாகப் பணியாற்றிக்கிட்டு வர்றேன். 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதப்போற நேரத்துல கொரோனா வந்து எழுத விடாம பண்ணிருச்சு. இதற்கிடையேதான், இப்போ 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிச்சிட்டாங்க.

பிள்ளைங்க எல்லாம் விடுமுறையில் இருக்காங்க. மாணவர்கள் பத்தின கவலை வந்திருச்சு. எங்கள் பகுதியில உள்ள பையனைக் கூப்பிட்டு, `எப்படித் தேர்வு எழுதப்போறடா'ன்னு, விசாரிச்சேன். அவனோ, `நீங்க வேற சார் படிச்சது எதுவும் இப்போ மண்டையில இல்ல, சும்மா அடிச்சி விட வேண்டியதுதான்'னு சொல்லிவிட்டுக் கிளம்பிட்டான். நம்ம எவ்வளவு நல்லா சொல்லிக்கொடுத்து இருந்தாலும், ரெண்டு மாச தொடர் விடுமுறையால் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் மறந்து போயிருக்க வாய்ப்பு இருக்குன்னு தோணுச்சு. உடனேதான் எங்கள் பள்ளியில 10-ம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கு எல்லாருக்கும் அவங்க வீடுகளுக்கே போய் மீண்டும் பாடத்தை ஞாபகப்படுத்தலாம்னு முடிவு பண்ணேன். தலைமையாசிரியர் ரொம்பவே சப்போர்ட் பண்ணாரு. கொரோனா நேரங்கிறதால வீட்டுக்கு வீடு சென்று எப்படி பாடம் எடுக்கிறதுன்னு மொதல்ல சின்ன தயக்கம் இருக்கத்தான் செஞ்சது. ஆனாலும், மாணவர்களுடைய படிப்பு ரொம்ப முக்கியம்ல.

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்
அதனால, தினமும் டூவிலர் எடுத்துக்கிட்டு மாணவர்களைப் பார்க்க கிளம்பிருவேன். பக்கத்துலயே பள்ளி இருக்கிறது என்பது கொஞ்சம் வசதி. எங்க பள்ளியில 23 மாணவர்கள் தேர்வு எழுத இருக்காங்க. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவங்களுக்குப் பாடம் எடுக்கிறேன். கணக்கு ரொம்ப முக்கியமான சப்ஜெக்ட்ங்கிறதால, கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக் கொடுக்கிறேன். மாணவர்களும் அவங்களோட பெற்றோர்களும் ரொம்பவே நல்லா சப்போர்ட் பண்றாங்க. மாணவர்கள் ஆரோக்கியமாகப் போட்டி போட்டுப் படிக்கணுங்கிறதுக்காக, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மோதிரம் பரிசுன்னு அறிவிச்சிருக்கேன். கண்டிப்பாகக் கொடுப்பேன். எப்ப தேர்வு வச்சாலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கணும் அதுதான் என்னோட நோக்கம்" என்கிறார்.