சென்னை: சென்னையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் விழா மேடையில் கண்ணீர் சிந்தி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

''வகுப்பறை நோக்கின்'' என்ற செயலி அறிமுக நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாதத்துடன் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த பல அதிகாரிகள் ஓய்வு பெறுவதை நினைத்தால் தமக்கு வருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், நிகழ்ச்சி மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர், உங்களை விட்டு பிரிவது வேதனையாக உள்ளது என ஓய்வு பெறவுள்ள அதிகாரிகளை பார்த்து கூறினார். அப்போது தன்னையறியாமல் அவர் கண்ணீர் சிந்தி அழுதது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் செங்கோட்டையன் கண்களில் கண்ணீர் கசிவதை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

ஆன்லைனில் கிளாஸ்களை தடுக்க முடியாது.. தடை அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் திடீர் அறிவிப்பு

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனின் பாதுகாப்பு அதிகாரி ராஜாராம் தண்ணீர் எடுத்துக் கொடுத்ததுடன், கண்ணீரை துடைத்துக்கொள்ள டிஷ்யூ பேப்பரையும் எடுத்துக்கொடுத்தார். அமைச்சர் செங்கோட்டையன் திடீரென உருக்கமாக பேசி அழுதது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தது.

அதிகாரிகளின் பிரிவை நினைத்து அமைச்சர் அழுதாரா இல்லை ஏதேச்சையாக கண்களில் தூசுபட்டதால் கண்ணீர் வந்ததா என்ற விவாதம் தலைமைச் செயலகத்தில் இன்று முழுவதும் ஓடியது.

ONEINDIA.COM