JEE,NEET,exam_date,covid19,coronavirus,ஜேஇஇ,நீட்

ஜே.இ.இ., 'நீட்' தேர்வுகள்:

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நீட் நுழைவு தேர்வு, மே, 3ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கால், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேரவும், ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ., நுழைவு தேர்வு, இந்தாண்டு, ஏப்., 4 முதல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னையால், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது .தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இது குறித்த அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த், நேற்று வெளியிட்டார். 

தேர்வுகள் தொடர்பான குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவர் நேற்று மாணவர்களுடன், 'ஆன்லைன்' வழியாக கலந்துரையாடல் நடத்தினார். இந்த உரையாடலில், நாடு முழுதும் உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு, அவர் தெளிவான விளக்கம் அளித்தார். அப்போது, தேர்வுக்கான தேதிகளையும் அவர் அறிவித்தார்.

அவர் கூறியதாவது: நீட் நுழைவு தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும். ஐ.ஐ.டி.,க்களுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, ஜூலை, 18ல் துவங்கும்; அம்மாதம், 18, 20, 21, 22, 23ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும். ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான, 'அட்வான்ஸ்டு' தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்த அறிவிப்பால், மாணவர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது. தேர்வுக்கு இன்னும், இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ளதால், அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் பயிற்சி பெற, போதிய அவகாசம் கிடைத்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2533953