தஞ்சாவூர் : பேராவூரணி அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று, பாடங்கள் நடத்தி வருகிறார். 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த, ஏனாதி கரம்பை கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் தமிழரசன், 52. கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், ௧௫ல் துவங்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தமிழரசன் தான் பணியாற்றும் பள்ளியில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள, 25 மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, பாடங்களையும் நடத்தி வருகிறார். 

இதனால், மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதுகுறித்து, ஆசிரியர் தமிழரசன் கூறியதாவது: பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர் களுக்கு, பாடங்களில் ஏற்பட்ட சந்தேங்களை தீர்த்து வைப்பதுடன், தேர்வுக்கு தேவையான பொருட்களையும், வாங்கி கொடுத்து வருகிறேன். சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் இருந்து, தினமும், 30 கி.மீ., வந்து செல்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.