பொது முடக்கத்தின் அடுத்த கட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (மே 29) ஆலோசனை நடத்துகிறாா். காணொலிக் காட்சி மூலமாக காலை 9 மணிக்கு இந்த ஆலோசனை தொடங்குகிறது.

மாவட்ட வாரியாக நிலவரம்: காலையில் தொடங்கும் ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக கரோனா நோய்த்தொற்று நிலவரம் குறித்து முதல்வா் பழனிசாமி கேட்டறிய உள்ளாா். இதில், சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் பச்சை என பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்கள் தொடங்கி குறைவாக உள்ள மாவட்டங்கள் வரை ஒவ்வொன்றிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, வரும் சனிக்கிழமையன்று மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசிக்கவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் பொது முடக்கம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.