நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து பரிந்துரை
புதுடில்லி :'கொரோனா' வைரசை எதிர்க்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், 'பிபாட்ரோல்' என்ற ஆயுர்வேத மருந்துக்கு உள்ளதாக, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
என்.ஆர்.டி.சி., எனப்படும், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், மருத்துவ பரிசோதனை செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றிற்காக, உள்நாட்டின், ௨௦௦ தொழில்நுட்பங்களின் தொகுப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில்

கூறப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில், ஆயுர்வேத நன்மைகளை, மக்களுக்கு எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாரம்பரிய வீட்டு வைத்தியத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் என் கேட்டுக்கொண்டார்.
நல்ல உடல்நலத்துடன் இருக்க, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறும், மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால், கொரோனா வைரசால் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம் என, சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபாட்ரோல் என்ற ஆயுர்வேத மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்து, இயற்கை நுண்ணுயிர்க் கொல்லியாக இருந்து, தொற்று, காய்ச்சல் மற்றும் வலியை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது.
மூக்கடைப்பு, தொண்டைப் புண், தலைவலி, உடம்பு வலி ஆகிய பிரச்னைகளுக்கு, இம்மருந்து விரைவான நிவாரணம் தரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.