வேலுார் : வி.ஐ.டி., பல்கலையில், நுழைவுத்தேர்வு இன்றி, எம்.டெக்., போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. 

வேலுார், வி.ஐ.டி., பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில், எம்.டெக்., -- எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, வழக்கமாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும். கொரோனா ஊரடங்கால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தாண்டு எம்.டெக்., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. இளங்கலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதற்கு, www.vit.ac,in என்ற இணையதளத்தில், ஜூன், 20 வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பங்கள் அனுப்பியவர்கள், இ - மெயில், மொபைல் எண்கள் தவிர, பிற தகவல்களை திருத்தம் செய்து கொள்ளலாம். 

'கேட்' தேர்வில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்காதவர்கள், இறுதி தேர்வுக்கு முன் எழுதிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடக்கும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைனில் நடக்கும். ஆக., 3 முதல் வகுப்புகள் துவங்கும். வேலுார், சென்னை, ஆந்திரா, போபால் ஆகிய வி.ஐ.டி.,க்களில், 23 வகையான, எம்.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வு இன்றி, நேரடியாக ஐந்து ஆண்டு இன்டெகரேடட் எம்.டெக்., - எம்.சி.ஏ., படிப்பில் சேரலாம். இதில் சேர, ஜூலை, 15 கடைசி நாள்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.