கொரோனாவை ஒழிக்க பல ஆண்டுகள் ஆகும் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா:''கொரோனா வைரஸ், எப்போது ஒழியும் எனக் கூற முடியாது; அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்,'' என, உலக சுகாதார அமைப்பின் அவசர கால செயல்பாடுகள் பிரிவின் தலைவர், மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது:கொரோனாவை ஒழிக்க, உலக நாடுகள் போராடுகின்றன. தடுப்பூசி இல்லாமல், கொரோனா வைரசை ஒழிக்க முடியாது. அதுவரை, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, போதிய அளவிற்கு அதிகரிக்க, பல ஆண்டுகள் ஆகும்.

மருத்துவ சிகிச்சை

தற்போது, சமூகத்தில் உள்ள வைரஸ்களில் ஒன்றாக, கொரோனாவும் மாறிவிட்டது. எச்.ஐ.வி., வைரசுடன் வாழ பழகி விட்டது போல, கொரோனா வைரசுடனும், மக்கள் இயல்பாக வாழ, தேவையான மருத்துவ சிகிச்சையை உருவாக்க வேண்டும். தடுப்பூசி கண்டுபிடித்தாலும், அது தயாரிக்கப்பட்டு மக்களை சென்றடைய நீண்ட காலமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மனநலம் பாதிப்பு

கொரோனாவால், மக்களின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்க, உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ், 'வீடியோ' பதிவை வெளியிட்டுள்ளார். 
அதில் அவர் கூறியிருப்பதாவது:பல ஆண்டுகளாக, மன நல ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல், புறக்கணித்து வந்துள்ளோம். மனநல சேவைகளில் போதிய முதலீடு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், தற்போது கொரோனா பிரச்னையும் சேர்ந்து, ஏராளமான குடும்பங்களில் மனநல பாதிப்பை அதிகப்படுத்திஉள்ளது.

நடவடிக்கை வேண்டும்

லட்சக்கணக்கான குடும்பத்தினர், தங்கள் பெற்றோர், குழந்தைகள், உற்றார், உறவினர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளனர். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். 
அத்துடன், கொரோனா சிகிச்சைக்கு உதவும், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமகன்கள், இளைஞர்கள், ஏற்கனவே மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வருவோர் என, அனைத்து தரப்பினருக்கும், மனநலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, உலக நாடுகள் கொரோனா சிகிச்சையுடன், மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். 

தினமும் 6,000 குழந்தைகள் பலியாவர்

ஐ.நா., குழந்தைகள் நல நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரஸ், உலக நாடுகளின், ஆரோக்கிய சேவையின் கட்டமைப்பை பலவீனப்படுத்தி விட்டது. அத்துடன், வழக்கமான சுகாதார பராமரிப்பு சேவைகளையும் முடக்கி விட்டது. இதன் காரணமாக, அடுத்த ஆறு மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட, 6,௦௦௦ குழந்தைகள், தினமும் பலியாக வாய்ப்பு
உள்ளது. இது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயினரைக் கொண்ட, 118 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. 

இதன்படி, போதிய சுகாதார வசதி கிடைக்காமல், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அடுத்த ஆறு மாதங்களில், கூடுதலாக, 12 லட்சம் குழந்தைகள் பலியாக கூடும் என, தெரிகிறது.அதில், பிரசவ கால குழந்தைகளின் இறப்பு, 56 ஆயிரத்து, 700க்கும் அதிகமாக இருக்கும் என, தெரிகிறது. இதே காலத்தில், இந்நாடுகளைச் சேர்ந்த பிற பிரிவினரும், 1.44 லட்சம் பேர் இறப்பர். 
கொரோனாவுக்கு எதிரான போரில், தாய்,சேய் நலனை நாம் புறக்கணிக்கக் கூடாது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க, இதுவரை எடுத்து வந்த முயற்சி வீணாகக் கூடாது. 
லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு, போதிய அளவில், நோய் எதிர்ப்பு மருந்துகள் கிடைக்காத சூழல் உள்ளது. அதனால், அவர்களின் இறப்பு விகிதம் உயரும் அபாயம் உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பெற்றோர் வேலையிழந்துள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் மன அழுத்தத்தில் உள்ளன. 
குறிப்பாக இளைஞர்கள் 
பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அகதிகள், புலம் பெயர்ந்தோர் ஆகியோரின் குழந்தைகளுக்கும், சுகாதார சேவைகள் கிடைக்காத நிலை உள்ளது.
கொரோனா, சமூக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள சீரழிவில் இருந்து மீளவும், குடும்பங்
களின் நிதித் தேவையை சமாளிக்கவும், குழந்தைகள் ஆரோக்கிய பராமரிப்பு சார்ந்த பணிகளுக்கு, உலக நாடுகள், உடனடியாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். 
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.