கிருஷ்ணகிரி : ராஜஸ்தான் மாநிலத்திற்கு, போட்டி தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர், நேற்று தமிழகம் வந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.மையங்கள் மூடல்இவற்றில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பலர், ஓராண்டாக பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுடன், பெற்றோர் சிலரும், வீடுகளை வாடகைக்கு எடுத்து, உடன் வசித்தனர்.இந்நிலையில், மார்ச், 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு, ராஜஸ்தான் மாநில அரசுடன் பேசி, அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தது.இதன்படி, சேலம், கோவை, நாமக்கல், சென்னை, திருவண்ணாமலை, கடலுார், கன்னியா குமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 55 மாணவ - மாணவியர், 23 பெற்றோர், 5ம் தேதி, கோட்டாவிலிருந்து மூன்று தனியார் பஸ்களில் புறப்பட்டனர். நேற்று காலை, தமிழக எல்லையான ஓசூருக்கு வந்த இவர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடந்தது. ரூ.6,500 செலவுபின், ஓசூரிலிருந்து கன்னியாகுமரிக்கு, 20 பேர், ஒரு பஸ்சில் புறப்பட்டனர். மற்றவர்கள் கிருஷ்ணகிரி வந்தனர்.

தொடர்ந்து, மாணவ - மாணவியர், இரண்டு பஸ்களில் சென்னை மற்றும் கோவைக்கு சென்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு திரும்ப, ஒவ்வொருக்கும் தலா, 6,500 ரூபாய் செலவானதாகவும், டோல்கேட்டில் கட்டாயமாக பணம் வசூல் செய்ததாகவும், மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.